Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

  ஆலியே-15

    “அப்படியில்லை ஸ்ஸீட்..” என்று கூறத்துவங்கவும், “நிறுத்து… நீ எதுவும் சொல்ல வேண்டாம் சந்தர்ப்பம் சூழ்நிலை இதையே எத்தனை நாட்கள் காரணம் காட்ட போற.

   அவனுக்கு பணத்தைக் கொடுத்து தான் ஆப் பண்ணியிருப்பனு எனக்குத் தெரியும். ஆனா இப்படி இதுயில்லை அது என்று காய்னை சுண்டிப்போட்டு என் வாழ்க்கை முடிவுக்கு வந்துருக்கும்னு எதிர்பார்க்கலை.

       நீ சொன்னது மாதிரி தருணேஷ் மேல எனக்கு லவ் எல்லாம் இல்லை. அவன் பிரப்போஸ் பண்ணியும் சம்மதிக்கலை.  ஷாக்கடித்தாலும் என் பெயரை உச்சரிக்கறானேனு தான் சம்மதிச்சேன்.

     உண்மையிலே உன்னை இரசித்துப் பார்க்கறப்ப நான் ஒவ்வொரு முறையும் என்னவோவொரு உணர்வில் மிதப்பேன். அதோட தாக்கம் தான் ஆள்மாறட்டம் கூடப் பெரிதா எடுத்துக்கலை. எனக்காகச் செய்த என்றவொரு சந்தோஷம் அடைந்தேன்.

    நீ அந்தச் சந்தோஷத்தை தகர்த்திட்ட. யூ சீட்.” என்றதும் சைதன்யன் தொட வரவும் நாலடி பின்னால் நகர்ந்தாள்.

     அங்கிருந்த பாதிப் பால் அவள் நிலையைத் தெளிவாகக் காட்டவும் சைதன்யன் மேலும் செய்வதறியாது திகைக்க, அந்தப் பாலை எடுத்து இவன் மூச்சியிலே வீசினாள்.

    அவை ஆறிபோனதால் எவ்வித கஷ்டமும் தராது போக, முகத்தைத் துடைத்தவன், “இப்பவும் சொல்றேன். நான் மூவ் பண்ணி உன்னை நெருங்கியது தவறா இருக்கலாம். ஆனால் ஒரே காரணம் அதுல என் காதலும் இருக்கு.” என்றவன் அவளைச் சமாதானம் செய்ய இயலவில்லை.

   அவனைப் பொறுத்தவரை அகமேந்தி திருமணத்துக்குச் சம்மதித்ததே அபூர்வம். இதில் உடனே மாற்றம் பெற்றது பேரதிர்ஷ்டம். இந்தக் காளி அவதாரம் தான் தன்னிடம் காட்டுவாளென எண்ணியிருக்க, இதோ இக்கணம் வெறுக்கத் துவங்கி விட்டாளே…

      “நெடுநேரம் அவளைப் பார்த்து பேச தயங்கி அவஸ்தை பட்டான். அவளோ கட்டிலில் முகம் பொத்தி அழுதாள்.

   சைதன்யன் நெடுநேரம் பேச முயன்று தோல்வியைத் தழுவினான்.

      அகமேந்தி அழுதழது மூக்கை உறிந்து கண்ணீரை அழுத்தி துடைத்து படுத்துக் கொண்டாள்.

     சைதன்யன் வலது கையைத் தலையில் வைத்து படுத்துக் கொண்டான்.

    அடுத்த நாள் கற்பாறை போல முகத்தை வைத்துத் தங்கள் வீட்டில் சென்றாள். அதன் பிறகு ஓட்டு வீட்டுக்கு எட்டியும் பார்க்கவில்லை. சைதன்யனும் சாப்பிட மட்டும் வந்தான், மருந்தை கூட அவனே போட்டுக் கொண்டான்.

      வித்யாதரன் இருவரையும் பார்த்துச் சைதன்யனிடம் விசாரிக்க, உண்மையைக் கூறினான். 

      நீங்க உங்க முழுச் சொத்தை இழந்ததையும் அவளுக்குத் தெரியப்படுத்தினீங்களா… அப்பவும் அவள் புரிந்துக்கலையா” என்றார்.

    புரிந்துக் கொள்ளவில்லையென்று தலையசைத்தான்.

      “கொஞ்சம் விட்டு பிடிங்க. அகமேந்தி விரும்பினா அவங்களை வெறுக்க மாட்டா.” என்றதும் சைதன்யன் மனமும் ஆமோதித்தது.

     தன்னை ஏமாற்றியவனை மனம் விரும்புகின்றதே என்ற கோபம் தன் மீதே தோன்ற அகமேந்தி அதனைச் சைதன்யன் மீது காட்டினாள்.

     அவனோ தனக்குத் தேவைதான் என்பதாக அமைதி காத்தான்.

     இரவு வந்ததும் அவள் அமைதியாக உறங்க செல்ல, “ஸ்வீட்ஹார்ட்… எதுக்குப் பேசாம கொல்லற”

      “இங்க பாரு டா… நான் கொலவெறியில் இருக்கேன். பேசாம தூங்கு. இருக்கற கோபத்துக்குக் கொன்றுடுவேன் டா” என்று கத்தவும் சைதன்யன் மனதிற்குள் நிம்மதியானான்.

     கடந்த முறை டா போட்டுப் பேசியதில் கோபம் வந்த தனக்கு இம்முறை மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது.

     அவள் டா போட்டு உரிமையாய் சண்டையிடவும் அது கூட அவனுள் போதையை உண்டு பண்ணியது.

நேற்றே பாதிப் பாலை அருந்தி அவள் மனதை அவனுக்குப் புரிய வைத்தமையால் கூடுதலாக நாட்கள் எடுத்து அவள் மனதின் வெறுப்பை அகற்ற என்ன வழியென்று சிந்தித்தான்.

    இப்படியாக இரு தினம் செல்லவும் தேஜு போன் செய்து கேட்டப்பின் தான் அலுவலகம் போவதை விடச் சைதன்யன் அலுவலகம் செல்ல வேண்டுமே. அவனின் அலுவலகம் இவனின்றி என்னாகும் அதனால் கிளம்பக் கூறினாள்.

அவனோ, “சொத்தை எழுதி கொடுத்துட்டேனு சொல்லிருக்கேனே புரியலையா. என்னோட ஆபிஸ் அவன் பெயருக்கு மாற்றிட்டேன்.” என்றவன் ரோஜா செடிக்கு நீரை ஊற்றிக் கொண்டிருந்தான்.

“ஓ… சார் அப்போ அன்னகாவடி ரேஞ்ச். அதான் இங்கயே உட்கார்ந்து சாப்பிட பிளானா. சே நான் கூட என் வீட்ல விரும்பி இருக்கியேனு ஒர் நிமிஷம் சந்தோஷப்பட்டுட்டேன்” என்று முனங்கி செல்ல சைதன்யன் மனம் வலித்தது.

அகமேந்தி மனதில் சைதன்யன் இனி என்ன செய்வானோ தன்னால் இப்படி நிலைமை மாறும் என உணவை வழங்கவும் மறந்திருக்க,

“பாப்பா… மாப்பிள்ளைக்குச் சாப்பிட எடுத்து வைக்காம அங்க என்ன பண்ணற?” என்றதும்.

ஆமா வேலை இல்லை வேலை வேலைக்குக் கொட்டிக்கணும். போகச் சொல்லுங்க அவரை…” என்றதும்

“அகமேந்தி” என்ற தந்தையின் உறுமல் கேட்டது.

“என்ன நினைத்துக்கிட்டு வாய்க்கு வந்தபடி பேசற, அவர் சொத்தை இழந்தது உன்னால. பதமா பேசற வழியைப் பாரு.” என்றார் வித்யாதரன்.

“என்னவோ பண்ணுங்க நான் வேலைக்குப் போகணும்.” என்று எழுந்தாள்.

“வசந்திடம் சொல்லி உன்னோட ஓர்க் சர்டிபிகேட் வாங்கிடலாம். இங்க..” என்றவனின் பேச்சில் இடைவெட்டினாள்.

“வசந்த் அங்க தானே வேலை செய்யறார். நான் இன்னமும் வேலையை நீக்கிடலையே. நான் ஏன் வேற தேடணும். நான் அங்கயே வேலைக்குப் போவேன்.” என்று இவன் யார் அந்த ஆபிஸில் விற்க சொன்னது. இவன் யார் என்னைய வேலையை விடச் சொல்லறது. இவனுங்க விளையாட்டில் என்னை ஏன் இழுக்கறாங்க என்ற கோபத்தில் அகமேந்தி இருந்தாள்.

“என்ன விளையாடறியா… அவனுக்குக் கீழ நீ வேலை செய்யறது எனக்குப் பிடிக்காது. உனக்கென்ன எனக்கு வருமானம் இல்லையென்ற கவலை எதுக்கு. நான் பத்து வருடத்துக்கு உட்கார்ந்து சாப்பிட அளவுக்கு என்னோட பேங்க் பேலன்ஸ் இருக்கு. நீ சம்பாதிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. காட் இட்” என்றான்.

“ஓ…. சார் உட்கார்ந்து சாப்பிட பிளானா. சும்மாவே இங்கயே இருந்தா குபேரன் கூட ஓட்டாண்டி ஆவான். உன்னிடம் என்ன பேச்சு… நான் நாளைக்குப் பெங்களூர் போகப் போறேன்.” என்றவள் பாதி உணவிலே கை அலம்பி எழுந்துக் கொண்டாள்.

“பாப்பா என்ன இது?” என்று வித்யாதரன் தடுத்து பேச,

“அப்பா இது எனக்கும் என் புருஷனுக்கும் இருக்கின்ற விவகாரம் நீங்க இதுல தலையிட வேண்டாம். உங்க வீட்ல இருக்கறதால எதுவும் அட்வைஸ் பண்ணிடாதீங்க” என்றாள்.

“ஏ கழுதை.. மாப்பிள்ளை ஓட்டு வீட்டையும் அது சுற்றியிருக்கற இடத்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிட்டார். அவர் ஒன்றும் சும்மா தங்கலை. அவர் வீட்ல தான் தங்கறார்.” என்றதும் அகமேந்தி அவனைப் பார்த்து முறைக்க, சைதன்யனோ அமைதி காத்தான்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் லீவ் கூட அனுப்பலை. ஆபிஸ் ஜாய்ன் பண்ணணும். நாளைக்குக் கிளம்பிடுவேன்.” என்று வீம்பாக மொழிந்தாள்.

வித்யாதரன் சைதன்யன் இருவரும் ஏன் இப்படிப் பண்ணறா என்பது போலப் பார்த்துக்கொண்டனர்.

அகமேந்தியோ குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் இவன் இருப்பான் ஆனா ஊரு உலகத்துல பார்க்கறவங்களுக்கு இவன் என்னவோ வீட்டோட மாப்பிள்ளையா தான் காட்டும். ஏற்கனவே என்னால ஆபிஸை இழந்துட்டு வேடிக்கை பார்க்கறான். இதுல சுயமரியாதை வேற இழக்கணுமா… இல்லை எதுனாலும் அங்க போய்ப் பார்த்துக்கணும்.

அந்த நாள் முழுவதும் சைதன்யன் பேச வந்தாலோ தவிர்க்க, அவன் இரவில் போக வேண்டாமெனச் சொல்லவும் நான் போவேன். நீ வந்தா வா. இல்லை மாமனார் வீட்ல உட்கார்ந்து சாப்பிடு” என்று மெத்தையை உதறி படுக்கவும் சைதன்யன் கோபமாகத் திரும்பி கொண்டான்.

அடுத்த நாள் மதியம் எல்லாம் எடுத்து வைத்துப் பெட்டியில் அடுக்க, சைதன்யன் தன் பெட்டியை எடுத்து முன் வைத்தான்.

“நீ எங்க வர்ற… அங்க லேடிஸ் தங்கக்கூடாது. தேஜு நான் மட்டும் தான் தங்க முடியும்” என்றுதும்

“பரவாயில்லை போய்ப் பார்த்துக்கலாம்.” என்று சோபாவில் அமரவும்

“என்ன அங்க வந்த ஆண்சிங்கமா இருக்கணுமா.? பெண் சிங்கம் வேட்டையாடி வந்து ஆண்சிங்கம் ஜம்பமா வீட்ல இருக்க?” என்றதும் மிகக் கூலாக, “தப்பென்ன ஸ்வீட்ஹார்ட். நான் உன் சம்பளத்துல சாப்பிடவோ தங்கவோ எனக்கு வெட்கம் இல்லை டியர். ஏன் ஆண்கள் சம்பாரிக்கணும் பெண்கள் வீட்டை பார்த்துக்கணுமா. பெண்களும் சம்பாரித்து, ஆண்கள் சில நாட்கள் உட்கார்ந்து சாப்பிடலாம். எனக்கு உன்கிட்ட மானம் அவமானம் எதுவுமில்லை. ஈகோவும் இல்லை.” என்று கண்ணடிக்க அகமேந்தி புறப்படத் தயாராக வாட்டர் கேனில் நீரை நிரப்பினாள்.

இவள் பேசியதை அறிந்திடாத வித்யாதரன் அப்பொழுது தான் வந்தார்.
“அகமேந்தி நீ செய்யறது நல்லதில்லை டா. அவர் ஆபிஸ் விற்றப்பிறகு அங்க நீ வேலை பார்க்கிறதே தப்பு. இதுல அவருக்குப் பிடிக்கலைனு தெரிந்தே அவர்களுக்குக் கீழே வேலை பார்க்கறதும். கொஞ்சம் யோசி டா.” என்று தாழ்ந்து கூறினார்.

“அப்பா… நேரத்துக்கு மாத்திரை சாப்பிடுங்க. ஆச்சி செய்யற குழம்புல உப்பு புளி காரம் தூக்கலா போடப்போகுது. பதமா வைக்கச் சொல்லுங்க. நாங்க வர்றோம் அப்பா” என்று பெட்டியை எடுக்கச் செல்ல அதற்குமுன் சைதன்யன் எடுத்துக் கொண்டான்.

இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை… என்றபடி புறப்பட, “அவ என்ன செய்தாலும் பொறுத்துட்டு போகாதீங்க மாப்பிள்ளை. பார்த்து பதமா நடங்க. சுடத்தண்ணீர் ஊற்றினாலும் சிரிச்சுட்டே இருக்காதீங்க. நான் வேற சப்போர்ட்டுக்கு இல்லை ஜாக்கிரதை. தினமும் தூக்கமாத்திரை போட்டாலும் அவ தானே போடறாயென்று வாங்கிக் குடிக்காதீங்க. உடம்புக்கு நல்லதில்லை.”

“மாமா என் பொண்ணைக் கண் கலங்காம பார்த்துக்கோங்கனு சொல்லற பேரண்ட்ஸ் டயலாக் தான் கேள்விப்பட்டுயிருக்கேன். நீங்க டிபரண்ட்.” என்றான் கேலியோடு சைதன்யன்.

“மாப்பிள்ளை வித்தியாசமானவரா இருக்காரே. அப்போ சொல்லற முறையும் வித்தியாசம் இருக்கணுமே.” என்று சொல்லி சிரிக்கவும்,

“நீங்க வரலைனா லக்கேஜ் கொடுங்க நான் போகணும்.”

“சாரி கார் டிரைவரா வேலைவிட்டுத் தூக்கிட்டேன். இல்லைனா நம்ம காரில் போயிருக்கலாம்.” என்று கூற அவளோ காரை மட்டும் எங்க நிறுத்தியிருப்பான் இவன் என்பதாகப் பார்த்து செல்ல டிராவல்ஸ் கார் வந்து நின்றது.

கல்பனா ஆச்சியோடு ஆசிர்வாதம் வாங்கி ஏறினார்கள். வித்யாதரன் இருவரையும் வழியனுப்பிக் கையசைத்தார்.

மகளோ சின்னதாகக் கையசைக்கச் சைதன்யன் நான் பார்த்துப்பேன் என்பதாய் வித்யாதரனை நிம்மதியடைய வைத்தான்.

சற்றுத் தூரம் கடந்ததும் தன்னவள் தோளில் கையைப் போட்டு நெருங்க, “கையை எடு டா.” என்றாள் ஓட்டுனருக்கு கேட்காத விதமாக.

“ஸ்வீட்ஹார்ட் ஆல்ரெடி உன்னோட பாதியா என்னை ஏற்றுக்கத் தான் நீ பாதிப் பாலை குடிச்சிட்டு எனக்குக் கோடு போட்டு கொடுத்துருக்க. சோ கை போடலாம். நீ டா போடலாம்.” என்று நெருங்கி உரசி காதில் ஜிமிக்கியை ஆட்டுவித்தான்.

“தள்ளி உட்காரு.. இல்லை கதவை திறந்து தள்ளிவிட்டுடுவேன்.” என்று சொல்லவும் “போடி” என்றவன் ஜன்னல் புறம் வேடிக்கை பார்த்துக்கொண்டே டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அகமேந்தி மனமோ ‘என்னால சொத்துப் போயிருக்கு, எங்க வீட்லருந்து வீட்டோட மாப்பிள்ளைனு பேர் வேற வரணுமா. என்னைத் தான் பூவா தலையானு விளையாடி என்னை நோகடிச்சாலும், இனியும் சைதன்யன் எதையும் இழக்க கூடாது’ என்று அவள் மனம் எண்ணியது.

-சுவடுபதியும்

-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!